15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனையினை வவுனியா மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய சிறுமியின் மாமனாரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைகளின் போது சந்தேகநபர் இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தீர்ப்புக்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.
இதன்போது எதிரியின் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு, 15 வருட கடூழிய சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், 2 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
அத்துடன், இரண்டாவது குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் குறித்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


















