-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்கள் குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் பத்திற்கும் அதிகமான பன்றிகளை சுகாதாரமற்ற சூழலில் வளர்த்துவருவது தெரியவந்துள்ளது.
அத்துடன் பன்றிகளின் மலக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் சுற்றுப்புறத்திலேயே வெளியேற்றப்பட்டு துர்நாற்றம் வீசியதுடன்;, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த பன்றி உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிவான் எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நடவடிக்கையில் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் ஆ.சுரேஸ்ஆனந்தன் தலைமையில், பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரதன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.


















