-தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றச்சாட்டு-
சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் சுதாகரன் அந்த இடைவெளியை எமது கட்சி நிரப்புமெனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. அந்த கட்சிகள் தொடர்ச்சியாக பிழையான பாதையில் பயணிக்கின்றன.
கட்சிகளில் சுயநலம் குடிகொண்டு, பொது நலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ்கட்சிகளுக்கு தமிழ் மக்களால் போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விட்டது.
2009 போர் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக தமிழர் விடுதலை கூட்டணி அதற்கான இடைவெளியை நிரப்பும்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளரத்தொடங்கியதோ அன்று தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்துவிட்டது. தந்தை செல்வாவுடனும் ஜி.ஜி.பொன்னம்பலத்துடனும் இருந்த ஒரே தலைவர் ஆனந்தசங்கரியே. அவரே இந்தக் கட்சியை கட்டமைத்து வருகின்றார். பழையவர்களை நாங்கள் மறக்கக்கூடாது.
பழையவர்களின் கடந்தகால அனுபவங்களும், எங்களது புத்திசாலித்தனமுமே இந்த தேசத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்.
எனவே, எங்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்பதுடன் இளைஞர்கள் எங்களுடன் இணைய வேண்டும் என்றார்.


















