சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 12/13/14.03.2026 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் 2026 இல் 109 ஆவது வருட பொன் அணிகள் போட்டியும், 33 ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி மார்ச் 21 இலும், 6 ஆவது T-20 கிரிக்கெட் போட்டி மார்ச் 25 இலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதுவரை காலமும் நடைபெற்ற பொன் அணிகள் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றன. 31 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்தன. மிகுதிப் போட்டிகளின் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
ஒரு நாள் போட்டியில் (ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 24 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றிபெற்றன.
2020 ஆம் ஆண்டு முதல் யாழ். மாவட்டத்திலே பாடசாலைகளுக்கிடையே முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட அருட்தந்தை பு.யு. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ணத்திற்கான T-20 கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 04 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 01 தடவையும் வெற்றிபெற்றது.
இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு P. மதுசனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு சு. ரு. ஜோன்சனும் தலைமை தாங்குகின்றனர். இரு கல்லூரி அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுவதினால், இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


















