‘டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு தயாராக உள்ளது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் – பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர்.
இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் – மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
















