-சு.பாஸ்கரன்-
முல்லைதீவு – தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார்.
போர் நிறைவுக்குவந்து 16 வருடங்கள் கடந்துள்ளபோதும், தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றளவும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஏ.சி.பாம் கிராம மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி சுமார் 28 வருடங்களாகியும் அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு இன்றுவரை திரும்பவில்லை.
மேற்படி கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பல்வேறு தடவைகளில், பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இன்றளவும் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
காணி அபகரிப்பதையும், திட்டமிட்ட குடியேற்றங்களையும் செய்யும் அரசாங்கம் பல வருடங்களாக தங்கள் சொந்த நிலத்திற்கு திரும்ப முடியாத நிலையிலுள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்ய தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகின்றது. இந்நிலையில் மேற்படி 3 கிராமங்களினதும் மீள்குடியேற்றம் n தாடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியான தீர்வை கோரவுள்ளேன்.
இம்மாதம் 15ம் திகதிக்கு முன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதில் உரிய தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.


















