தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் மௌனமான உள்ளனவர். சில வீதிகள் விடுவிக்கப்படும் போது மட்டும் நாடா வெட்ட அவர்கள் வருகின்றார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சாடியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஒவ்வொரு வரவு – செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உரையாற்றிய போது வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
பாதுகாப்பு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் தரப்பில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பற்றி எவ்விடத்திலும் பேசியதில்லை. காணி விடுவிப்பு நிகழ்வுக்கு நாடா வெட்டுவதற்கு மாத்திரமே இவர்கள் செல்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் பாலடிவேட்டை, காயங்கேணி, கல்லடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் காணிகள் மற்றும் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படவில்லை.
வலிகாமம் வடக்கில் ஒரு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 2500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் உள்ளது. அதேபோல் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள காணிகளும் இராணுவ வசம் உள்ளது. காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு வீதிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றன.
வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சலூன்தான் உள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் ஒன்றை விட பல சலூன்களை இராணுவத்தினர் நடத்துகிறார்கள். இது தான் உண்மை.
தேசிய மக்கள் சக்தியில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாண பிரதிநிதிகள் இனி வடக்கு, கிழக்குக்கு இனி செல்ல முடியாது. அமைச்சர் சந்திரசேகரை மக்கள் தெரிவு செய்யவில்லை. அவர் தேசியப் பட்டியலில் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.


















