-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ்-
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளினால் கபளிகரம் செய்யப்படாமல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன் திரட்சியாக இருப்பதற்கு இதுவரை தமிழ்த் தேசியக் கட்சிகளில் தொடர்ச்சியாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் ஒதுங்கி இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்தார்.
சாகும்வரை தலைமைப் பதவியில் இருக்க வேண்டும் என்ற மன எண்ணங்களை தவிர்த்து புதிய திருப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கான புதிய நம்பிக்கையையும் ஆரோக்கியமான செயல் வடிவங்களையும் புதிய தலைமைகள் மூலம் வெளிகாட்ட வேண்டும். இதுவே தற்போதைய களச் சூழலுக்கு அவசியமானது.
மக்களின் உரிமை சார் விடயங்களில் தோல்வி முகங்களை தொடர்ந்து பார்த்து சலிப்படைந்த மக்கள் விரக்தியின் அடிப்படையில் விலகிச் செல்ல முற்படுகின்றனர். இதனைத் தடுக்கவும் தமிழ் இளையோரை தமிழ்த் தேசிய பாதையில் வீறுநடை போடச் செய்யவும் புதிய தலைமைகள் மக்கள் முன் வெளிக்காட்டப்பட வேண்டும்.
ஜனத்தா விமுக்தி பெரமுன கட்சியில் ஆயுதப் போராட்ட கால உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் ஜனநாயக அரசியலுக்கு திரும்பிய பின்னர் உள்வாங்கப்பட்டவர்கள் தலைவராகவும் ஏனைய பதவிகளிலும் நியமிக்கப்பட்டதன் வெற்றியை தற்போது அறுவடை செய்துள்ளனர்.
ஆகவே தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் மிக விரைவாக கட்சித் தலைமைகளில் இளையோருக்கு குறிப்பாக தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி மிக்க நேர்மையான அவலங்களை அனுபவித்த போரின் உண்மைகளை உணர்ந்தவர்களை புதிய தலைவர்களாக மக்களுக்கு அறிமுகம் செய்வதன் ஊடாகவே தமிழினத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். இந்த விடயம் கட்சித் தலைமைகளுக்கு கசப்பாக இருந்தாலும் செயற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















