-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்-
-வி.சரவணன்-
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
துமிழினப் படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து தமது உலகமகா நடிப்புத் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது. பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைக் கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறு தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலநூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டும், வயது முதிர்வினாலும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத தேடிவரும் எஞ்சியுள்ள பெற்றோரும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏனைய உறவினர்களும் தமது தொடர்பேராட்டத்தின் பத்தாவது வருடத்தின் தொடக்கநாளில் பாரிய ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இறுதிக்கட்ட வட்டுவாகல் பாலத்தின் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆரம்பித்து வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இறுதிக்கட்ட போரின்போது வட்டுவாகல் பகுதியில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்ததாகக் கூறப்படும் இடம்வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
வட்டுவாகல் பாலம் என்பது தமிழ் இனப்படுகொலையின் நினைவுச் சின்னமாகும். எனவேதான் அந்தப்பாலத்தின் தொடக்கப் புள்ளியிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்ததுடன், தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடம் வரையில் மேற்கொண்டனர்.
இத்தகைய அவலநிலைகளை தாங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த உறவுகள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்குமாறு எம்மால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


















