-வி.சரவணன்-
தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலரசு இருந்த காலத்தில் மக்கள் அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்றிருந்தனர். ஆனால் போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களிலேயே பார்க்கமுடிகிறது.
மன்னார் மாவட்ட பொதுமருத்துவமனைக்கான விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டுமானம், புத்தளம் மன்னார் மாற்றுவழிக்கான இயலுமை ஆய்வு, விவசாயத்துறை சார்ந்து வவுனியா, மன்னார் சிறு பற்றுநில விவசாயிகளுக்கான வலுவூட்டல், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாய உணவு உற்பத்தியாளர்களுக்கான வலுவூட்டல், முல்லைத்தீவு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை உட்கட்டமைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட குறித்துக் கூறப்பட்ட வன்னி மாவட்டத்திற்குள்ளான நிதி ஒதுக்கீட்டுக்கு வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்வாண்டில் தொடக்கப்பட்ட வெட்டுவாய்க்கால் பாலக் கட்டுமானத்துக்கான 2026 ஆம் ஆண்டின் தொடர் நிதி ஒதுக்கீட்டுக்கும் முல்லைத்தீவு மக்கள் சார்பில் நன்றி கூறுகிறேன். தீவில் உள்ள அனைவருக்கும் சம அளவான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துவதே சமத்துவம் என எண்ணுகிறோம்.
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவம். போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் நாங்கள் குரலெழுப்பவில்லை.
குரல் எழுப்பவேண்டிய தேவையும் எங்களுக்கு ஏற்படவில்லை. அப்போதிருந்த எங்களின் நிழல் அரசு அனைவர்க்குமான வளப்பகிர்வை, தற்சார்பு வாழ்வியலை, போதை அறவே அற்ற, அறம் நிரம்பிய வாழ்வை சான்றாக்கி இருந்தது. போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே காட்டின.
கடந்த ஓராண்டு காலமாக வன்னி மாவட்டம் அபிவிருத்தியில் பெரும்பாலான துறைகளில் மிகவும் பின்னடைவாக காணப்படுவதை புள்ளிவிபரங்களோடு துறைதோறும் விவாதித்திருந்தேன் மீன்பிடி, விவசாயம், சிறுகைத்தொழில், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு என வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நாளும் நாளும் போராடிப் போராடி வாழுகிற வாழ்வியலை இந்த அரசும் தக்கவைக்கிறதா என்ற கேள்வியோடு மிகவும் நெருக்கமாகத்தான் இந்த வரவுசெலவுத்திட்டம் பயணிக்கப்போகிறது. முல்லைத்தீவு கடற்பரப்பிலே ஒவ்வொரு நாளும் தான் திருட்டுத் தொழில் நடைபெறுகிறது.
கண்ணெதிரே சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த மீன்பிடியை – ஊழலை, உங்கள் அரசால் ஏன் இன்னும் கட்டுப்படுத்த இயலவில்லை. ஊழல் எங்கே உள்ளது? அகத்திலா புறத்திலா? அடுத்துவரும் ஓராண்டும் இந்த அரசு எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கப்போகிறதா?
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே குளிரூட்டிய பேருந்துகளில் பயணித்த எங்கள் மக்களுக்கு, மாறி மாறி வரும் அரசுகளால் இந்த 15 ஆண்டுகளில் ஒரு குளிரூட்டிய பேருந்துக்கான வழித்தடத்தைக் கூட முல்லைத்தீவுக்கு வழங்க இயலவில்லை.
வீதிப் புனரமைப்பு, கிராமப்புற பாலங்கள் புனரமைப்பு, பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் வரையான பேருந்து வசதி, பேருந்து தரிப்பிடங்களுக்கான தேவை என்பவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் – மாந்தை கிழக்கு பிரதேசங்கள் கடுமையான சமச்சீரற்ற நிலைக்குச் சான்றாகின்றன.
விவசாய உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதிலும் ஊழியர்கள் பணிக்குச் செல்வதிலும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து மீண்டும் வீடு திரும்புவதிலும் நோயாளிகள் மருத்துவ வசதிகளைப் பெறுவதிலும் குறித்த பிரதேச மக்கள் சமமான அணுகலை இன்றுவரை பெறவில்லை.
போக்குவரத்துக்கான 456 பில்லியன் உரூபாய் நிதியிலே அவர்களின் இடர்களையும் இழிவளவாக்க வகைசெய்யுங்கள் என இந்தப்பேரவையிலே கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.


















