வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன இழிவுபடுத்தல், வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே உடன் நிறுத்து என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.
இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.
ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















