வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் மற்றும் வர்த்தகம் செய்யும் நிலையில் அதன் ஊடாக பெறப்படும் வருமானம் எங்கே போகிறது? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் மூன்று இலட்சம் மக்கள் தாங்கியிருந்த மெனிக் பாம் காணியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இது போன்று முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களின் பல ஏக்கர் காணிகளை அபகரித்து இராணுவத்தினர் வருமானம் ஈட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மெனிக்பாம் வீதியில் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு இராணுவம் மிளகாய் காயவைப்பதை நானே கண்டேன்.
மக்களின் நிலங்களை அபகரித்து, போர் காலத்தில் எமது மக்களின் கால்நடைகளை அபகரித்துள்ளனர். ஏ9 வீதியில் சகல இடங்களிலும் உணவகங்கள், சலூன்களை நடத்துகின்றனர். இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவத்தினருக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது.
இந்த வருமானத்தை அவர்கள் என்ன செய்கின்றார்கள். அதற்கு கணக்கு காட்ட முடியுமா? எங்களுடைய மக்களின் கால்நடைகளை பயன்படுத்தும், விவசாய நிலங்களை பயன்படுத்தும் இராணுவத்தினரின் வருமானம் எங்கே போகிறது? எமது மக்கள் அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், இராணுவத்தினரால் நடக்கும் இவ்வாறான சம்பவங்களால் மக்கள் நெருக்கடிக்குள் இருக்கும் உணர்வில் இருக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அதனை இல்லாமல் செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அது எப்போது நடக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பிலும் தெளிவான பதிலளிப்புகள் அவசியமாகும் என்றார்.


















