-கூறுகிறார் பொதுஜன பெரமுனவின் எம்.பி-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கு அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் இருப்பது அவசியம். இராணுவ முகாங்களாலேயே அப்பகுதி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்தபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
சுதந்திரத்தின் கம்பீரத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. தற்போதுள்ள நிலையில், சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமலாகி உள்ளதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. சுதந்திர தினச் செய்தியில், படையினரின் வீரதீரச் செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது.
சுதந்திர தினத்தன்று சிலர், கறுப்புக் கொடியும் ஏற்றியுள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சில இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள் என்றார்.


















