-சொ.வர்ணன்-
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் nஜினிற்றா கூறினார்.
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்தினார்கள். அந்த போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், தமிழ் மக்களை ஒடுக்கும் நோக்கில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பு பேணப்பட்டு வருகின்றது.
இராணுவ வெளியேற்றத்தை கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இன்றளவும் இராணுவம் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் திராணி உள்ள நிலையில், இராணுவத்தை பாதுகாப்புக்காக வைத்திருக்கிறோம் என ஆட்சியாளர்கள் கதை விடுகிறார்கள்.
தமிழர் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம், பௌத்த விகாரை கட்டுவதற்கே இராணுவத்தை வைத்திருக்கிறார்கள். அதுவே உண்மையான விடயம். அதற்கு சிறந்த உதாரணம் தையிட்டி திஸ்ஸ விகாரையாகும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு பகுதியில் இராணுவத்தை பயன்படுத்தி தமிழரின பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கே இராணுவ இருப்பு தேவைப்படுகிறது.
தமிழ் மக்கள் தருவதை பெற்றுக்கொண்டு இருக்கும் இனம் அல்ல, எமது உரிமைகள் கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம் சிறிலங்காவின் சுதந்திர நாள் எமது உரிமைகள் கிடைக்கும்வரை கரிநாளாகவே இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















