-இலங்கை கல்வி அபி.குழமத்தின் காப்பாளர் சச்சிதானத்தின் –
-த.சுபேசன்-
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இந்தளவு கட்சிகள் தேவை தானா? என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் ஊடகங்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் கட்சிகள் தேவையில்லை. ஆரம்ப காலத்திலும் தமிழர் தேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற சிங்களத் தலைமைகளைக் கொண்ட அரசியல்வாதிகளை ஆதரித்த தமிழ் மக்கள் இருந்தனர். இப்பொழுதும் இருக்கின்றனர். ஆதலால் மூன்றாவது கட்சியாக தமிழ் இடதுசாரிக் கட்சி என இருப்பது உகந்தது. இந்த மூன்று கட்சிகளும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், ஒற்றுமையைப் பேணுவதற்கும், அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் போதுமானவை.
இன்று தமிழ்த் தேசியம் பேசும் பெரும்பாலான கட்சிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களினால் வழிநடத்தப்படுகின்றன. இந்தக் கட்சிகள் எல்லாமே தமிழரசு கட்சியில் இருந்து வளர்ந்தவர்கள். ஆகையினால் இவர்கள் அனைவரும் தமது தாய் கட்சியை மீள உருவாக்கி, ஒற்றுமையை வளர்த்து, தமிழர்களுடைய கல்வி, தொழில், பொருளாதாரம், மருத்துவம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்காகவும், இனவிருத்திக்காகவும் உழைக்க வேண்டும்.
மக்கள் இல்லாத நாடு எவருக்குமே பயன் தராது.எமது நாடு சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளிலும் பார்க்க தற்போதைய அரசியல் கட்சிகள் பெருகி விட்டன. அரசியல்வாதிகளும் பெருகி விட்டார்கள். ஆனால் அன்று இருந்த அரசியல் பிரச்சினைகளிலும் பார்க்க தற்போது பிரச்சினைகள் அதிகமாகிவிட்டன. குடியேற்றப் பிரச்சினையாக ஆரம்பித்த பிரச்சினை பின்னர் மொழிப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, தொழில் பிரச்சினைகளாக மாறி இன, மதத் துவேஷங்களாக அவை உருவெடுத்துவிட்டன.
அதிகளவான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதால் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. தொழில் வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால் வருவாய் குறைந்துள்ளது. இதனால் இனவிருத்தி இல்லை.அதன் காரணமாக வட பகுதியில் பல பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


















