தமிழ், சிங்கள மக்கள் தமது தாய்மொழியுடன் டிஜிட்டல் கருத்திட்டத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
டிஜிட்டல் மயமாக்கலின் போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். ஒரு சில நாடுகள் ஜனநாயகம், மனித உரிமைகளை புறக்கணித்து டிஜிட்டல் மயமாக்கலை செயற்படுத்த முனைந்த போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. ஆகவே நாட்டில் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாகவே டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் 30 வருடகால யுத்தம் காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இன்றளவிலும் நல்லிணக்கம், அமைதி உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டிஜிட்டல் மயமாக்கலை அமுல்படுத்த புதிய திட்டங்கள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.
டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாக கட்டமைப்பில் ஏதேனும் வலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் இச்சட்டம் மீறப்பட்டுள்ளது என்றார்.















