தம்புள்ளையில் 12 பில்லியன் ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை புதிய இடத்தில் நிறுவுவது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்றுமுன்தினம் தம்புள்ளை வளகம்பா பிரிவெனா வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
இந்த புதிய மருத்துவமனையின் முழு கட்டுமானத்திற்கும் சுமார் பன்னிரண்டு பில்லியன் ரூபா செலவிட எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் கட்டத்தின் கீழ் 130 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளில் தொடங்கி அதிகபட்சமாக 200 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டுமானப் பணிகளை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் தொகை மற்றும் நகர பயன்பாட்டின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தம்புள்ளை ஆதார மருத்துவமனை உட்பட நாட்டில் உள்ள நான்கு மருத்துவமனைகளை விரைவில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புதிய மருத்துவமனை தற்போதைய தம்புள்ளை மருத்துவமனையில் அல்லாமல் நவீன முறையில் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


















