தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது ஒரு சட்டவிரோதமான செயலாகும் என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாய்மூலமான பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் இறுதி அமர்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கலாநிதி லக்மால் பெர்னாண்டோ:
‘தற்போது மிகக்குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை எளிய மக்களின் மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் சுமார் 1375 சதவீதமாகும். அதேவேளை, அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர் அல்லது 1000 அலகுகளைப் பயன்படுத்துபவர் தற்போது செலுத்தும் 56,000 ரூபா, 18,876 ரூபாவாகக் குறையும். இது ஒரு நியாயமான நடைமுறை என்று நான் நினைக்கவில்லை. இவை அனைத்தும் ஒரு தனிநபரின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. அவ்வாறு இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், மேல் மாகாணத்திற்கான கருத்துக்கேட்டல் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இது பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் இறுதி அமர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.


















