-மு.தமிழ்ச்செல்வன்-
ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கிறது. இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை.
“தூய்மை இலங்கை” செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ என்ற தேசிய திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு வேலையை எவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சிந்திப்பதை விட அதைச் செய்யாமல் விடுவதற்கான காரணங்களைத் தேடுபவர்களாகவே சில திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளனர். சேவைபெற வருபவர்கள் எமது மக்கள் என்று அந்தத் தலைவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று நினைப்பதில்லை. அடுத்த தலைமுறையாவது மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
புத்தாக்க சிந்தனையையும் தலைமைத்துவப் பண்பின் ஊடாக வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எங்கள் மக்களுக்காக எவ்வாறான விடயங்களை புதிதாகச் செய்யலாம். அதன் ஊடாக அவர்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்திக்கின்ற தலைவர்களாக நீங்கள் உருவாக வேண்டும்.
மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் 8 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெற்ற செயலமர்வில் மாலை மாணவர்களின் பெற்றோருக்கான செயலமர்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சு.லாவண்யா, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அ.க.சிவனருள்ராஜா, கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் அதிபர் அ.பங்கயற்செல்வன் மற்றும் வளவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















