-சுரேன் ராகவன் விடுத்த அவசர எச்சரிக்கை-
சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை தான் அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சுரேன் ராகவன் கவலை வெளியிட்டார்.
இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இலங்கையின் வர்த்தகத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆழமான மற்றும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
அண்மையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் மூன்று ஈரானிய போர்க்கப்பல்களில் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், அந்தச் சம்பவம் நடப்பதற்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே குறித்த கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி கோரியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
எமது நீர்ப்பரப்பிற்குள் வருவதற்கு அனுமதி கோரப்பட்டபோது ஏன் அது வழங்கப்படவில்லை அல்லது தாமதிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், தாக்குதல் இடம்பெற்ற பின்னர் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முன்வந்த அரசாங்கத்தின் திடீர் மனமாற்றம் எதனை உணர்த்துகிறது என்றும் வினவினார்.
மேலும், ‘ஐ.ஆர்.ஐ.எஸ் பாஷ்ரே’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 201 பேரை இலங்கையில் தடுத்து வைத்துள்ளமை மற்றும் அந்தப் போர்க்கப்பலை திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ள தீர்மானம் குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். திருகோணமலைத் துறைமுகத்தில் இக்கப்பல் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அத்துறைமுகத்தைச் சூழவுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெருமளவிலான தமிழர்களின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சவால்களைப் பட்டியலிட்ட சுரேன் ராகவன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 60 சதவீதத் தேயிலை விநியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த வார தேயிலை ஏலத்தின் போது 25 சதவீதத்திற்கும் அதிகமான தேயிலை விற்பனையாகாமல் தேங்கியுள்ளமை தேசிய பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெயை சுத்திகரிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் அல்லது தென் ஆப்பிரிக்காவிலிருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கினாலும் அதனைப் பயன்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியிலான காலதாமதமும் சிக்கல்களும் உள்ளதாக அவர் விளக்கினார்.
இவ்வாறான பாரிய சர்வதேசப் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்துள்ள நிலையில், இதனை ஒரு தனி நபரால் அல்லது ஒரு கட்சியால் மட்டும் கையாள்வது சாத்தியமற்றது என அவர் தெரிவித்தார். எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி, இந்தத் தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.


















