திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், திருகோணமலையில் புத்தர்சிலை ஒன்று பிரதிஸ்டை செய்த விவகாரம் தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை வைக்கப்படுகிறது. அது பொ லிஸாரால் அகற்றப்படுகிறது. பின்னர் பொலிஸாரால் அதே இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தச் சம்பவத்தை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆக்கிரோசமாக குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். சஜித் பிரேமதாச இந்த கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இந்த நாட்டில் மதத்தை முன்னிலைப்படுத்தி தான் காலம்காலமாக பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.
திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 30 விகாரைகள் கட்டப்படுகின்றன. திரியாய் பகுதியில் இரண்டு சிங்களவர்களுக்காக 1 விகாரை கட்டப்படுகிறது. கிழக்கில் பல இடங்களில் காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. அரசாங்கம் இதனை தடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லதொழியும், இது மிகவும் அபாயகரமானது என்றார்.


















