தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளாகம் மற்றும் கோயிலின் வெளிப்புறப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகைத் திருநாளான இன்று (நவ. 24) ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அதேசமயம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி நாளை (நவ. 25) மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயில் வளாகம் மற்றும் கோயிலின் வெளிப்புறப் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


















