ராமேஸ்வரம் – தலைமன்னார் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை உள்ளிட்ட ஐந்து முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது.
புதுடெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மொத்தம் 9,600 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இதில் ராமேஸ்வரம் – தலைமன்னார் சேவை திட்டத்தின் கீழ், 118 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்தி, சுமார் 26 கடல் மைல் தூரத்தில் உள்ள இலங்கையின் தலைமன்னமாருடன் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது முக்கியமான திட்டமாகும்.
இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள், குடிவரவு, சுங்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உரிய அனுமதிகளுடன் படிப்படியாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதர திட்டங்களாக, கடலூரில் 4,700 இந்திய கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்கடல் துறைமுகம் அமைத்தல், சென்னை மெரினா, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியில் படகுத் துறைகள் மற்றும் கடல்சார் நடைபாதைகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் சென்னை – புதுச்சேரி பயணிகள் கப்பல் சேவைக்காக 900 கோடி ரூபாய் முதலீட்டிற்கான கோரிக்கைகளும் இதில் அடங்கும்.
மேலும், நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான தற்போதைய கப்பல் சேவையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதன் மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


















