அ.அன்பழகன்
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் தனது வர்த்தக, பொருளாதாரச் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கடந்த 2026 ஏப்ரல் 27 அன்று கையெழுத்தாகியிருந்த நிலையில், தற்போது முழுமையாகச் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 20 முக்கிய அத்தியாயங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பாரம்பரிய வர்த்தகப் பிரிவுகளுடன் மட்டுமல்லாமல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி, கலாச்சாரம், பாரம்பரிய அறிவு, மற்றும் தொழில்நுட்ப உதவி போன்ற பல சமகால, தொலைநோக்கு அம்சங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் விரிவானதாகவும் வலிமையானதாகவும் மாற்றக்கூடியவொரு தளமாக இந்த ஒப்பந்தம் உருவெடுத்துள்ளமை முக்கிய அம்சமாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பின்னணியை நோக்கினால், கடந்த நிதியாண்டுகளில் இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி குறிப்பிடத்தக்களவில் உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. வர்த்தகம், தொழில்துறை அமைச்சின் தரவுகளின்படி, 2022ஆம் நிதியாண்டில் 862.4 மில்லியன் டொலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2026ஆம் நிதியாண்டில் 1.2 பில்லியன் டொலர்களாக அதிகரித்து, 7.6சதவீத கூட்டு வருடாந்த வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தரவுகளின்படி, ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2026 வரையிலான காலப்பகுதியில் நியூசிலாந்தின் அந்நிய நேரடி முதலீடுகள் வருகையானது, இந்தியாவிற்குள் 88.80 மில்லியன் டொலர்களாக இருந்துள்ளது. அதேபோல, உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் சேவை ஏற்றுமதி 13சதவீதம் அதிகரித்து, 561 மில்லியன் டொலரிலிருந்து 634 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதில் சுற்றுலா, தொலைத்தொடர்பு, கணினி மற்றும் தகவல் சேவைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் அரசியல் மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள 2019ஆம் ஆண்டின் நிகழ்வுகளை நினைவு கூர்வது அவசியமாகும். 2019இல் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா விலகியது. குறிப்பாக சீனாவிலிருந்து பெருமளவில் பொருட்கள் இறக்குமதியாகி உள்நாட்டுச் சந்தையைப் பாதிக்கும், வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும், இந்தியாவின் உணர்திறன் மிக்க துறைகளைப் பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தியா அந்முடிவை எடுத்தது. அந்த முடிவு இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்தபோதிலும், பிராந்திய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பைச் சற்று வரம்பிற்குட்படுத்தியது.
இருப்பினும், தற்போதைய இந்தியா-நியூசிலாந்து ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை’ அமைப்பில் அங்கம் வகிக்கும் சீனா தவிர்த்த ஏனைய அனைத்து நாடுகளுடனும் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் இணையாமல் விலகியிருந்தாலும், பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பிலிருந்து இந்தியா விலகி நிற்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளது. இத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்களை உண்மையான வர்த்தக, முதலீட்டு மற்றும் விநியோகச் சங்கிலி ஆதாயங்களாக மாற்றுவதே இந்தியாவுக்கு முன்னாலுள்ள தற்போதைய உண்மையான சவாலாகும்.
பொருட்கள் வர்த்தகத்தில் சந்தை வாய்ப்பே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இவ்வொப்பந்தம் அமுலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்து சந்தையில் நூறுசதவீத தீர்வையற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது புடவை, முடிவுறுத்தப்பட்ட ஆடைகள், தோல்பொருட்கள், காலணிகள், இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட இந்தியாவின் உழைப்புச் செறிவான துறைகளின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வெகுவாக உயர்த்தும். மேலும், இது நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
மறுபுறம், இந்தியா தனது 70.03சதவீத வர்த்தகப் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், 29.97சதவீத உணர்திறன் மிக்க பொருட்களை விலக்கு பட்டியலில் வைத்துப் பாதுகாத்துள்ளது. நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான அப்பிள், கிவி பழம் மற்றும் மனுக்கா தேன் போன்ற பொருட்களுக்கு இந்தியா ‘சுங்கவரி விகித ஒதுக்கீடுகளை’ வழங்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் உணர்திறன் மிக்க விவசாயத்துறைகளைப் பாதுகாத்துக் கொண்டே, நியூசிலாந்துக்கும் சந்தை வாய்ப்பளிக்கப்பட்டு சமநிலையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நியூசிலாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள சீனாவுடன் இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியிடுவதில் நிலவிய வரிப் பின்னடைவை இந்த ஒப்பந்தம் குறைக்கிறது.
வர்த்தக வரிகளுக்கு அப்பால், சேவைகள், முதலீடு மற்றும் திறன்சார் தொழிலாளர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றில் இந்த ஒப்பந்தம் பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. நியூசிலாந்து 118 சேவைப் பிரிவுகளில் தனது வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடன், 139 துறைகளில் சலுகை பெற்ற நாடு என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளது.
மாணவர்களின் விசா உரிமைகளைப் பொறுத்தவரை, படிக்கும் காலத்தில் வாரத்திற்கு 20 மணி நேரம் வரை பகுதி நேரமாகப் பணிபுரியும் உரிமையை நியூசிலாந்து இந்திய மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்குப் படிப்பிற்குப் பிந்தைய 3 ஆண்டுகள் வரை வேலை செய்யும் உரிமையையும், கலாநிதி பட்டத்தை முடிப்போருக்கு 4 ஆண்டுகள் வரையிலும் வேலை விசா உரிமையையும் நியூசிலாந்து வழங்கியுள்ளது.
அதேபோல், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல் மற்றும் இதர சிறப்புத் துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய தொழில்வல்லுநர்களுக்கு 3 ஆண்டுகள் வரை நியூசிலாந்தில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் திறமைமிக்க இளைஞர் சக்திக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடுகிறது.
மேலும், நிதித் தொழில்நுட்பம், டிஜிட்டல் கட்டணமுறைகள் மற்றும் கட்டணச் செயலி இடைப்பயன்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட இணங்கியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவின் இணையவழிக் கட்டண முறையையும் நியூசிலாந்தின் செலுத்துகை முறையையும் இணைக்கும் பணியை நோக்கி நகர்ந்து வருகிறோம்’ எனத்தெரிவித்துள்ளார். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் மருத்துவச் சுற்றுலாத்துறை மேம்படவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுத் துறையைப் பொறுத்தவரையில், அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் சேவைகள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு போன்ற உயர் மதிப்புத் துறைகளில் இந்த முதலீடுகள் கவனஞ்செலுத்தும். மேலும், இந்த ஒப்பந்தத்தில் உள்ள ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி’ பற்றிய அத்தியாயம் மிகவும் சுவாரசியமானது. இது வெறும் வர்த்தகத்திற்கு அப்பால் சென்று இரு நாடுகளுக்குமிடையே அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
குறிப்பாக, ‘விவசாய உற்பத்தித்திறன் கூட்டாண்மை’ அமைப்பின் மூலம் இந்திய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கிவி, அப்பிள் மற்றும் தேன் போன்ற விளைபொருட்களுக்கான சிறந்த விவசாய முறைகள், அறுவடைக்குப் பிந்தைய முகாமை, சேமிப்புக் கிடங்கு மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகளை வலுப்படுத்த தொழில் நுட்பப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சந்தைகளைத் திறப்பதோடு மட்டுமல்லாமல், விநியோகச் சங்கிலிகளைப் பல்வகைப்படுத்துவதிலும், வர்த்தகத்தை முதலீடு மற்றும் திறமையாளர்களுடன் இணைப்பதிலும் இந்த ஒப்பந்தத்தின் வெற்றி அடங்கியுள்ளது.

















