கலைப் பணியில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம், 19ஆம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெறவுள்ளன.
இதனை முன்னிட்டு இரு நாள்களும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் திருமறைக் கலாமன்றத்தின் ஏனைய பிராந்திய தமிழ், சிங்கள மன்றங்களும் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை வழங்கவுள்ளன.
முதல்நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ், மறைமாவட்ட ஆயர் பேரருள் திரு. யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஆசியுரைகளை பேராசிரியர் ம.பாலகைலாசநாத சர்மா, வண.கலைமாணி மீஹாஹயன்துர சிறி விமல தேரர், அiஷக் முஜிபுர் றஹ்மான் மௌலவி ஆகியோர் வழங்குவர்.
கலை நிகழ்ச்சிகளாக பாணந்துறை, புத்தளம் திருமறைக் கலாமன்றங்கள் வழங்கும் நடனங்கள், திருமறைக் கலாமன்ற இளையோர் அவையினரின் ஒயிலாட்டம், திருமறைக் கலாமன்ற இசைக்கலைஞர் இ.ஜெயகாந்தனின் மெல்லிசை, இளவாலை திருமறைக் கலான்றம் வழங்கும் ‘பாஞ்சாலி சபதம்’ நடன நாடகம், யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் வழங்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ இசைநாடகம் போன்றவையும் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கௌரவ விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருள்திரு ப. யோ.ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கலை நிகழ்ச்சிகளாக அவிசாவளை திருமறைக் கலாமன்றம் மற்றும் கலைத்தூது அழகியல் கல்லூரி வழங்கும் நடனங்கள், திருமறைக் கலாமன்றம் தயாரித்தளிக்கும் ‘பூதத்தம்பி’ நாட்டுக் கூத்து என்பனவற்றுடன் கலைஞர் கௌரவிப்பும், நாடகப் பயிலக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.


















