-செ.ரவிசாந்-
திருகோணமலையில் தோற்றுவிக்கப்பட்ட புத்தர் சிலைப் பிரச்சினை திட்டமிடப்பட்ட சிங்களப் பௌத்தப் பேரினவாதச் செயற்பாடு என புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில்: பௌத்த மதச் சூழலை ஆளும் வர்க்கக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் தமது இருப்புக்கு ஏற்ற கவசமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமே திருமலை புத்தர் சிலை விவகாரமாகும். இவ் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த பேரினவாதத்திற்கு முன்னால் அடிபணிந்து சமரசமாகிக் கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகி நின்ற அவலத்தையே காண முடிந்தது.
இத்தகைய ஆட்சியினரிடம் எவ்வாறு மதச்சார்பற்ற நிலைப்பாட்டினை எதிர்பார்க்க முடியும்? இது இவ்வாறிருக்க இச் சம்பவத்தை தெற்கில் பதவி இழந்த ஆளும் வர்க்கத் தரப்புக்களும், வடக்கில் தோல்வி கண்ட தமிழ்க் குறும் தேசியவாதத் தரப்புக்களும் மேற்படி சம்பவத்தைத் தத்தமது இனவாத, மதவாத மொழிவாதப் பிரதேசவாத நோக்கங்களுக்குப் பயன்படுத்தித் தமது குறுகிய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முன் நிற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















