-விடுதலைப் புலிகளை அழிக்க துணைபோனது ஜே.வி.பி-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பை நடத்துவதற்கும் தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேச விரோத கொள்கைகளைக் கொண்ட இவர்கள் இன்று தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் பற்றிப்பேசி வடக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்று ஈழத்தமிழ் தேசத்தினுடைய தேசியத்தலைவர் மட்டுமல்ல உலகத்த தமிழருடைய தலைவருமான பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் தேசியத்தலைவரின் போராட்டத்தை 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புக்களில் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கக் கூடிய ஜே.வி.பி பிரதான இடத்தை பெறுகின்றது.
மஹிந்த ராஜபக்ச தரப்பு இனவாதம் பேசியபோது தமிழினத்திற்கு எதிராக, தேசியத்தலைவரின் தலைமைத்துவத்தில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு, இன அழிப்பிற்கு தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள்தான் இந்த ஜே.வி.பி.
அவர்கள்தான் இன்று வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்துவதற்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும் தாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு காட்டிக் கொண்டு தெற்கிலே அதற்கு நேர்மாறான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் பிரதானமான நபர் கடற்றொழில் அமைச்சர்.
தேசியத் தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் பற்றிப்பேசாது வடக்கு, கிழக்கிற்குள் நுழைய முடியாது. அப்படியானால் எந்தளவு தூரத்திற்கு தமிழத்தேச விரோத தத்துவங்களைக்கொண்ட தரப்புகள் தோல்வியடைந்துள்ளன என்பதனை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்றார்.















