வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட எம்.பி. யுமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையின் தேவை அவசியமாக உள்ளதால், தேர்தலை நடத்துவதில் குறைபாடுகள் இருந்தால் திருத்தங்களை கொண்டுவந்து அரசாங்கம் விரைவில் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் 3 தடவைகளுக்கு மேல் மாகாண சபையில் அங்கம் வகித்திருக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து செய்த சேவையை விட அதிகமான சேவையை அதன் மூலம் மக்களுக்கு என்னால் வழங்க முடிந்துள்ளது. மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு நெருக்கமாக இருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதனால் அனைத்து மக்களுக்கும் மாகாண சபை மிகவும் அவசியம் .
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏதாவது குறைபாடுகள் காணப்படுமானால் அல்லது பெண் உறுப்பினர்கள் அதில் இடம்பெற வேண்டுமானால் திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


















