-ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்-
-க.கனகராசா-
வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மேலைத்தேய நாடுகளிலே அதிகளவில் தொற்றாநோய்கள் காணப்பட்டன. இவ்வாறான நிலையில் அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் தொற்று நோய்களே அதிகம் காணப்பட்டன.
நாங்கள் எப்பொழுது மேலைத்தேய கலாச்சாரத்தை உள்வாங்கினோமோ அன்றில் இருந்து தொற்றாநோய் நாட்டில் அனைவரையும் விழுங்கி வருகிறது.
இலங்கையை பொறுத்தவரையில் 89வீதமான இறப்பு தொற்றா நோயினாலே ஏற்படுகிறது. அதிலும் 50 தொடக்கம் 60 வயதிற்கு உட்பட்டவர்களின் இறப்பில் 10 பேரில் 4 அல்லது 5 பேர் தொற்றாநோயினால் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு மிகமுக்கிய காரணமாக மேலைத்தேய உணவுகள், விரைவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எம்மை ஆக்கிரமித்தமை, உடற்பயிற்சி இல்லாமை, மதுபானம், புகைத்தல் பயன்பாடு அதிகரித்தமை, உளநெருக்கீடு, மிகமுக்கியமாக எம்மில் எமக்கு கவனம் இல்லாமை போன்றவையே இதற்கு காரணமாகும்.


















