நீதிபதி பயணித்த வாகனத்தை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரிகள், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், காணொளி எடுத்த கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஒப்படைத்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபர் காணொளி எடுத்த கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஒப்படைத்து அறிக்கை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
சந்தேக நபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோருவதாகவும், அவரைப் பிணையில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


















