சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.
கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்தவின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் நன்மை கருதி திடீர் வேட்டைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் பிரதீப் கலுதொட்டராச்சி ஆலோசனை வழங்கியுள்ளதாக கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதன் காரணமாக பல்வேறு தரப்பினருக்கு எதிராக இவ்வருடம் தொடரப்பட்ட வழக்குகள் மூலம் கண்டி மாவட்டத்தில் சுமார் 90 இலட்ச ரூபாய் வரை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கண்டி காரியாலயம் தெரிவிக்கிறது.
இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்றல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களுக்கு விலைகள் குறிக்கப்படாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 989 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலமே மேற்படி அபராதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கண்டி நகரில் உணவு விற்பனை செய்யும் பிரதான நிறுவனம் ஒன்றில் தண்ணீர் போத்தல்களில் குறிப்பிடப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்ததாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து இலட்சம் ரூபா அபராதமாகப் பெறப்பட்டதாகவும், அதிகார சபையின் கண்டி மாவட்ட பிரதானி துசார ரெனபான தெரிவித்தார்.
கண்டி, வத்துகாமம், நாவலப்பிட்டிய, கம்பளை, கடுகண்ணாவ, திகன, தெல்தெனிய, பேராதெனிய, கட்டுகஸ்தோட்டை உட்பட கண்டி மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் இந்தத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்தது.

















