-ரஷ்ய தூதுக்குழு அறிவிப்பு-
-வலுசக்தி துறையிலும் ஒத்துழைப்பு-
எரிபொருள் வழங்க இணங்கியது ரஷ்யா
இலங்கைக்கு சுத்தீகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உள்ளிட்ட ரஷ்ய உயர்மட்ட தூதுக்குழுவினர் இணங்கியுள்ளனர்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இலங்கை வந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில்
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, ரஷ்யா இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ரஷ்யா நன்கு புரிந்து வைத்துள்ளது. அதன் அடிப்படையில் எரிபொருள் மட்டுமன்றி தொழிநுட்பம், இயந்திர உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வகையிலும் இலங்கைக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது. அதேசமயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் ரீதியான உதவிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானவர்கள் ரஷ்யர்கள்.
பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் ஊடாக ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக – கலாசார உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கும் ஆதரவு என்பவற்றையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
அமைச்சர்களுடனான சந்திப்பில்
இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல் குறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழு இணக்கம் தெரிவித்தது.
மேலும் இலங்கைக்கு உதவ எந்தச் சந்தர்ப்பத்திலும் தயார் எனவும் குழு தெரிவித்தது.


















