-சு.பாஸ்கரன்-
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் அரச நிறுவனங்களின் சேவைகள் இடம்பெற்றன.
அத்துடன் இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த ஒரு தம்பதியினருக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டதுடன் பொதுமக்களுக்கான வாழ்வாதார திட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
குறிப்பாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘வலுவூட்டல்’ திட்டத்தின் கீழ் 7.9 மில்லியன் ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக செவிப்புலனற்றவர்களுக்கான கருவி, சக்கரநாற்காலிகள், கட்டில், என்பனவும் தெங்கு அபிவிருத்தி சபை ஊடாக தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான புத்தகப்பைகளும், உறுமய திட்டத்தின் கீழ் காணி பத்திரங்களும் வழங்கப்பட்டன.


















