-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன்-
பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைத்தார்
நாங்கள் செல்லும் இடமெங்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக பெற்றோர்கள் தொடர்ச்சியாக முறையிடுகிறார்கள். கடந்த வருடம் வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள் யாழ் மாவட்டத்திற்கு பதிலீட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கே பெரும் தவறு நடந்துள்ளது. வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்களை யாழ் மாவட்டத்திற்கு அனுப்பிய பின்னர் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை நியமிக்காமல் ஏமாற்று நடந்துள்ளது. இதனை சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை வழங்கிய பின்னரே யாழ். மாவட்டத்திற்கு எடுத்திருக்க வேண்டும். இது தவறான செயற்பாடு.
தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் எமது வன்னிப் பிரதேசத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தின் கல்வியையும் சீரழித்துக் கொண்டிருககின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.


















