நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
வடக்கு- கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் புதிய சட்டமாக வர உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
ஆனால் பரந்த வரையறைகள் மற்றும் கடுமையான பிரிவுகள் காரணமாக இது பொது மக்களின் போராட்டங்கள் ,சிவில்
சமூக செயற்பாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினரை குறிவைக்கக் கூடும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், இலங்கை குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களும் பாதிக்கப்படலாம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கலந்துரையாடலில் வளவாளராக சட்டத்தரணி எஸ்.டினேசன் கலந்து கொண்டதுடன் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ,ஊடகவியலாளர்கள், மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் இச்சட்டம் தேவை இல்லை என்பதையும்,தாம் இச்சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


















