அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என கோசம் எழுப்பியதுடன் புதிய அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும், அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயக விரோதமானவை என கோசம் எழுப்பினர். மேலும் அநுர அரசு தேர்தல் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம் எனக் கூறி வழங்கிய வாக்கறுதிகள் எங்கே? எனவும் கேள்வி எழுப்பினர்.
இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


















