-வடக்கு சிவில் அமைப்புகள்-
தையிட்டி விகாரைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியமை ஒற்றையாட்சி பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது அல்ல என்பதை மீள வலியுறுத்துவதாக அமைகின்றது என வடக்கு சிவில் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம்,குரலற்றவர்களின் குரல் அமைப்பு,கிராமிய உழைப்பாளர் சங்கம்,யாழ்.மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்,வடமாகாண காணிகள் உரிமைக்கான மக்கள் அமைப்பு,தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்,தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் இணைந்து மேற்படி விடயம் தொடபில் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவித்திருப்பதாவது:
தையிட்டியிலுள்ள சட்டவிரோதமானவும் ஜனநாயக விரோதமானதுமான பௌத்த விகாரைக்கு எதிராகவும், தமது நில உரிமையை நிலைநாட்டக் கோரியும் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கிய சிறீலங்கா அரசினதும், தற்போதைய அரசாங்கத்தினதும், அதன் கருவிகளான பொலிஸாரினதும் கருத்தியலையும் செயற்பாடுகளையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த அறவழிச் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆன்மீகத் தலைவரும் துறவியுமான தவத்திரு வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், என அனைவரின் மீதும் பிரயோகிக்கப்பட்ட வன்முறையையும் , அவர்களின் கைதையும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
இதனை, சிறீலங்காவின் அமைதிக்கு நிரந்தரப் பங்கம் விளைவிக்கும் சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதற்காக அரசு மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகிறோம்.
இந்த நிலையில், ஒற்றை மத மேலாதிக்கத்தையும், ஒரு தேசிய இனத்தின் மேலாண்மையையும் உறுதிப்படுத்தும் ஒற்றையாட்சி (ஏக்கிய இராச்சிய) பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது அல்ல என்பதை மீள வலியுறுத்தி, மற்றைய தேசிய இனத்தின் மதத்தலைவர்கள், சமூகத் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவரும் அமைதி வழியில் போராடிய வேளையில், திட்டமிட்டு வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்ததை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.


















