-எதிர்க் கட்சிகள் அனைத்தும் கூட்டாக வெளிநடப்பு-
-பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு-
இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க அரசு மறுத்து வரவு செலவுத்திட்ட விவாதத்தை நடத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் சபை நடவடிக்கைகள் நேற்றுக் காலை 11.01 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் சபை மீண்டும் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு கூடவுள்ளது.
பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பினையடுத்து தற்போதைய நெருக்கடியான நிலையில் சபை நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர வேண்டியிருப்பதால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சபை முதல்வரான பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரினார்.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக எம்.பி இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மக்கள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்ததுடன் இயற்கை அனர்த்தம் தொடர்பில் பேசுவதற்கு முழுநாளை ஒதுக்குமாறு கோரினார்.
இந்நிலையில் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாட கட்சித்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபை நடவடிக்கையை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக காலை 9.06 மணிக்கு அறிவித்தார். இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் காலை 10.17 மணிக்கு கூடியது.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபிர் ஹாசிம் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு நேற்று முழுநாளையும் ஒதுக்குமாறும் அதன் பின்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து மீண்டும் 5 ஆம் திகதி கூட்டுமாறும், அப்போது வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற நாம் எந்த வித வாக்கெடுப்பையும் கோராது ஆதரவு வழங்குவதாக நாம் கூறியபோதும் அதற்கு அரசு மறுத்து இன்று (நேற்று) நண்பகல் 12.30 மணிவரை வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு நேரத்தை ஒதுக்குவதாக கூறுகின்றது. எனவே எதிர்கட்சியாகிய நாம் சபை நடவடிக்கைகளிலிருந்து வெளியேறுகின்றோம் என அறிவித்தார்.
இதன்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏதோ கூறமுற்பட்டபோது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். இந்நிலையில் எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன், புதிய ஜனநாயக முன்னணியின் ஏ,.பி. ரவி கருணாநாயக்க ஆகியோரும் அரசு 12.30 மணிவரை வரவு செலவுத்திட்ட விவாதத்திற்காக சபையை நடத்த எடுத்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்ததுடன் தாங்களும் சபை நடவடிக்கைகளிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இயற்கை அனர்த்தத்தை அரசியலாக்க வேண்டாமென எதிர்கட்சிகளிடம் வேண்டியதுடன் இன்று (நேற்று) சபை நடவடிக்கை 12.30 மணிவரை நடைபெறும். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 3 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு கூடுமெனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்றைய விவாதத்திற்குரிய அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புக்களை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி ஆகியோர் முன்வைத்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்ததால் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தை முன்னெடுத்த செல்ல முடியாததால் சபை நடவடிக்கைகளை 11.01 மணிக்கு ஒத்திவைத்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபை மீண்டும் 3 ஆம் திகதி காலை 9 மணிக்கு கூடுமென அறிவித்தார்.


















