நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரையில் பாடசாலைகளை தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வாரத்தின் புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏனைய நான்கு நாட்களும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும். கடந்த காலங்களில் நிலவிய நிச்சயமற்ற தன்மையால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, மாணவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு வாரத்திற்கு 4 நாட்கள் பாடசாலைகளைத் தடையின்றி நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக, மாற்று வழிமுறைகள் மூலம் நிலைமையைக் கையாள அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.


















