வரவு – செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்
புதிதாக சொத்து வரியை அறிமுகப் படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. 2027 ஆம் ஆண்டிலிருந்து அரச வருமானத்தில் சொத்து வரியும் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் சம்பிக்க ரணவக்க, வரவு செலவுத்திட்ட விளக்கவுரையின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரின் ஆட்சிக் காலத்தில் சொத்துவரி எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் :
2027, 2028 ஆம் ஆண்டுகளிலிருந்து சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. சொத்து வரியில் உழைக்கும் வருமானத்துடனேயே எமது பொருளாதார குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அந்த சொத்து வரி எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை இன்னும் அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. அதற்காக கணக்கெடுப்பு எதுவும் நடத்த திட்டமிட்டுள்ளார்களா, அவ்வாறு கணக்கெடுப்பு நடத்தினால் பிரதேசசபை அல்லது நகரசபை மட்டத்தில் முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் எந்த நிலைப்பாட்டையும் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.
அதனால், வரவுசெலவுத் திட்ட விளக்கவுரையில் அவரின் ஆட்சிக் காலத்தில் சொத்துவரி எவ்வாறு அமுல்படுத்தப்படும், அது பொதுமக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும், உள்ளூராட்சி சபை நிறுவனங்களினூடாக அதனை எவ்வாறு செயற்படுத்த போகிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயங்களை மூடி மறைக்காமல் நாட்டு மக்களுக்கு அந்த விவரங்களை வெளிப்படுத்தவேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2027 ஆம் ஆண்டிலிருந்து அரச வருமானத்தில் சொத்து வரியும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.















