புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு ஒழிந்துவிட்டதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாகாணசபைத் தேர்தலில் அரசின் தோல்வி உறுதியானது எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு புத்தர் சிலை விவகாரத்துடன் இல்லாமல் போய்விட்டது. இது முடிந்த சம்பவம் என்றும் ஏன் அதுபற்றி கதைக்கின்றீர்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிலை அந்த இடத்தில் இருக்கும் வரையில் இந்த சம்பவம் முடிந்த சம்பவம் அல்ல. உங்களின் நிகழ்ச்சி நிரலில் அந்த இடத்தில் சிலையை வைத்துள்ளமையினால் அது முடிந்த விடயமாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் இனவாதமான செயற்பாடு ஞாபகமூட்டும் விடயமாகவே இந்த சிலை அமையும்.
அந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதனை வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார். அதாவது வலது கையால் அன்றி இடது கையால் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டார். இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபை அமைச்சுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி வாக்கெடுப்பை கோரும்.
வாக்கெடுப்பை கோருவதன் காரணத்தில் ஒன்று மாகாணசபைக்கு எதிரானது. மற்றையது ஒரு வருடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வைத்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கானது என்றார்.
நீங்கள் மாகாண சபைகள் தேர்தலை இன்று நடத்தினாலும், ஒரு வருடத்தின் பின்னர் நடத்தினாலும் தோல்வியடைவீர்கள். மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் பாராளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைவீர்கள் என்றார்.


















