பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் வட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆபாசப் புகைப்படங்களாக மாற்றி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மற்றுமொரு சந்தேகநபர் நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.


















