2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் (பட்ஜட்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேசப்பட்டிருந்தது. தற்சமயம் அது தொடர்பில் எமது சமூகத்திலும் ஒரு பரவலாக பேசப்படுகிறது. சற்றே இது தொடர்பில் நான் விரிவாக பேசவேண்டும் என எண்ணுகிறேன்.
இம்முறை பாதீட்டின் மூலமாக 25 நாட்கள் வேலைக்கு வருகை தரும் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 200 ரூபா அரச நிதியின் மூலம் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
ஒரு சமூகத்தின் நீண்டகால தொடர் பிரச்சினையாக இருக்கும் இந்த தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தில் அரசாங்கம் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பொருந்திய ஒரு அரசாங்கம் அரசியல் ரீதியாக இந்த விடயத்தை அணுக வேண்டும்.
சட்டம், அமைச்சர்கள், ஏற்றுமதி வருமானம், மக்களின் வாழ்வாதாரம், அரசாங்கத்துக்கு ஆதரவளித்த மக்கள் போன்ற அக புற காரணிகளை கருத்திற்கொண்டு நிரந்தர அரசியல் பொறிமுறையை கையாள வேண்டும்.
கடந்த காலங்களில் சட்ட விரோத செயற்பாடுகளின் மூலமாக சொத்துக்களை சேகரித்தவர்களின் சொத்துக்களை முடக்க உடனடியாக சட்டங்களை இயற்றியது போலவோ அல்லது முன்னாள் ஜனாதிபகளின் வரப்பிரசாதங்களை குறைக்க உடனடியாக சட்டங்களை இயற்றியது போலவோ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக, அவர்களது தொழில் பாதுகாப்பு மற்றும் இதர நலன்புரி விடயங்களை உள்ளடக்கிய வகையில் புதியதொரு சட்டத்தை உருவாக்கி எமது மக்களையும் தேசிய ரீதியில் சட்டரீதியாக அங்கீகரித்து இந்த சம்பள விடயத்துக்கு அரச பொறிமுறையினூடாக நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
இக்காலகட்டத்தில் அதிகரித்திருக்கும் வாழ்க்கைச்சுமை, அதிகரித்திருக்கும் பொருட்களின் விலைவாசிகள், இதர செலவுகளை மையமாக கொண்டு அடிப்படை சம்பள அதிகரிப்பின் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒரு நிரந்தர தீர்வினை இந்த அரசாங்கம் பெற்றுத்தரும் என்றே நாம் எதிர்ப்பார்த்திருந்தோம்.
ஆனால் வழமையான 200 வருட கால மலையக மக்களின் வரலாற்றில் கடந்த ஒன்றரை தசாப்த காலமாக எவ்வாறு எமது மலையக மக்கள் அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்டார்களோ, அதே போலவே அதற்கு சமமான, அதற்கு நிகரான துளியும் குறைவில்லாத அளவில் மக்கள் இம்முறையும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உள்ளிட்ட கம்பனிகளின் அனுசரனையுடன் பல திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது. ‘தொடர் வீட்டு புனரமைப்பு திட்டம்’ என இந்த அரசாங்கம் ஏற்கனவே இருந்த லயன் வீடுகளை பெயிண்ட் அடித்து வர்ணம் பூசி மீள மக்களிடம் கையளித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இந்த திட்டங்களின் பிரதான அனுசரனையாளர்கள் கூட மேற்குறிப்பிட்ட கம்பனிகள்தான்.
ஆக இந்த அரசாங்கம் அராஜக கம்பனிகளுக்கு எதிராக, எமது மக்களுக்கு ஆதரவுக்குரலாக செயற்பட்டு சம்பள விடயத்தில் நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுத்திருக்கிறதா என்றால்? இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால் தற்சமயம் ஒவ்வொரு தோட்டங்களிலும் வேலைசெய்யும் தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, தினசரி ஒவ்வொரு தோட்டங்களிலும் பெறப்படும் கொழுந்தின் அளவு, காடாகியிருக்கும் தோட்டங்களின் அளவு, குளவி கொட்டு, சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதிக மழை, அதிக குளிர் போன்ற காலநிலை மாற்றங்கள் என நீண்டுகொண்டே போகும் களப்பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்காமல் தொழிலாளர்கள் தொடர்பில், இன்னும் வேலை செய்யக்கூடிய நிலையில் தோட்டங்கள் பராமரிப்புடன் இருக்கிறதா போன்ற விடயங்களை அலசி ஆராயாமல் 25 நாட்கள் கட்டாயம் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது.
அப்படி 25 நாட்கள் வேலைக்கு சமூகமளித்தால் மாத்திரமே 200 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். அதுவும் அந்த கொடுப்பனவை கம்பனிகள் மாத்திரம் வழங்கியிருந்தால் கூட பரவாயில்லை. இதற்கு அரசாங்கமும் உடந்தையாக, அரசாங்கம் திறைசேரியிலிருந்து பணம் வழங்குவது என அறிவித்திருப்பது எம் மக்களை மிக மிக வேதனையடைய செய்திருக்கிறது.
அலையில் அல்லுண்டு வந்த அரசாங்கம், அதன் ஆதரவாளர்கள் என இப்போது இந்த சம்பள அதிகரிப்பு பலருக்கும் இனிக்கலாம், இந்த சமயத்தில் இது பேசுபொருளாக இருக்கலாம். பட்டாசு வெடித்து வெடி கொளுத்தி ஆரவாரம் செய்யலாம், ஆனால் சரியாக சிந்தித்துப்பார்த்தால் இந்த முடிவு எம்மை, எமது மக்களை அரச அனுசரனையுடன் கம்பனிகளிடம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நவீன தேசிய செயற்பாடாகவே எமக்கு தோன்றுகிறது.


















