புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற என்.பி.பி அரசாங்க அமைச்சர்களின் கூற்று தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வெறும் மேடைப் பேச்சுகளுடன் முடிந்துவிடக் கூடாது. கடந்த ராஜபக்ஷ அரசும் புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து இதேபோன்ற வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றிய வரலாறே அதிகம் உள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் அதே பாதையையே பின்பற்றுகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும். அதைச் செய்யத் தவறும் அரசு, புதிய அரசமைப்பு என்ற மாயையை உருவாக்கித் தமிழ் மக்களின் வாக்குகளைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று கூறும் அநுர அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து மௌனம் காப்பது ஏன்?
முறையான வரைவுகள் அல்லது காலக்கெடு இன்றி ‘அரசமைப்பு உருவாக்கம்’ என்று பேசுவது வெறும் அரசியல் நாடகமாகும். இத்தகைய போலி வாக்குறுதிகளைத் தமிழ் மக்கள் இனியும் நம்பமாட்டார்கள். என்றார்.


















