நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசியல் எண்ணங்களை ஒருபக்கத்தில் வைத்துவிட்டு பொருளாதாரம் குறித்தான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நிகழ்ச்சி நிரல்கள் இன்றி அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாயின் நாம் போதுமான ஒத்துழைப்பை வழங்குவோம்.
இதேவேளை தங்காலையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது நாட்டில் பிரதான பிரச்சினையாக போதைப்பொருள் இருப்பதை போன்ற தோற்றப்பாட்டை காட்ட முயல்கின்றார்.
அரசாங்கம் முன்செல்வதற்கு ஏதாவது இருக்க வேண்டும். இதனால் போதைப்பொருள் விடயத்தை பிடித்துக்கொண்டு போகின்றனர். இதன் இறுதி பெறுபேறு என்ன என்பதனை இப்போதே கூறலாம்.
இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், இளைஞர்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்காமல் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது. எனவே அரசாங்கம் இவ்வாறான பொய்யான வேலைகளை நிறுத்த வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் தொழில்முயற்சி என்ற வசனத்தை உள்ளடக்கியிருந்தாலும் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது. தொழில்முயற்சியாண்மை என்ற சிந்தனையை உருவாக்கும் நாளிலேயே மக்கள் போதைப் பொருளில் இருந்து நீங்குவர், ஒரே இனமாக முன்னால் வருவர் என்றார்.


















