-கஜிந்தன்-
போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்முறையில் ஈடுபடுவோர் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. அத்துடன் பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகின்றது என்ற சந்தேகம் காணப்படுகின்றது. இவை தொடர்பாகவும் பருத்தித்துறை பொலிஸாரிடம் விளக்கம் கோரினேன்.
அத்துடன் பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்துக் குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டுமென பருத்தித்துறை பொலிஸாரிடம் கோரியிருக்கின்றேன்.
இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன் என்றார்.


















