-பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல-
சாதாரண பிரஜை ஒருவருக்கு பொலிஸ் சான்றிதழ் தேவைப்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும் என்பது அவசியமற்றது. போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். இவர்களின் செயற்பாடு கீழ்த்தரமானது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிவில் பிரஜை ஒருவருக்கு பொலிஸ் சான்றிதழ் தேவைப்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. அரசியல் செய்வதற்கு ஏதுமில்லாத சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் ஏதாவதொன்றை பிடித்துக் கொண்டு போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.
பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற வேண்டும் என்ற போலியான குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் இந்தளவுக்கு கீழ்த்தரமான அரசியல் நிலைக்கு வந்துள்ளார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு குழு பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவகர் உட்பட ஏனைய தரப்பினரை உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சியினர் ஏதாவதொரு வழியில் குழுவின் செயற்பாட்டை பலவீனப்படுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இவர்களின் செயற்பாடு கீழ்த்தரமானது என அவர் மேலும் தெரிவித்தார்.


















