-சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல்-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் சக்தியை இழந்து விடுவோம் எனும் பய நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணி மக்களின் விடுதலையை மறந்து முதலாளித்துவத்தின் பாதையிலும் பயணிப்பதால் தம்மை பாதுகாத்துக் கொள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சட்டமாக்க துடிப்பதாக உணரமுடிகிறது. இதற்கு எதிராக நாட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார தோல்விகளையே வெளிப்படுத்துகின்றது. தேர்தல் காலத்தில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வர மாட்டோம் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இது மீறும் செயல் மட்டுமல்ல வாக்களித்த மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து சடலங்களாக மட்டும் வாழ வைக்கும் வன்கொடுமை சட்டமுமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் கருத்தறிய வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் அரச பயங்கரவாதம் உச்சம் தொட்டுள்ளதை காணலாம். பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் கொடிய முகத்தை தமிழர்கள் கண்டார்கள். தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தில் அன்று ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் அவரது கட்சிக்கும் இல்லாத வன்கொடுமை முகம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இருப்பதாகவே மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை முன் வைப்பதன் இன்னும் ஒரு முக்கிய நோக்கம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தொடர்ந்தும் தமிழர்கள் தமது பாரம்பரிய தாயகம், தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை தொடர்பான கருத்தாடலிலும் அதை நோக்கிய அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முற்று முழுவதுமாக அழித்து அரசியல் ரீதியில் தமிழர்களை எழ முடியாமல் தள்ளுவதே இவர்களின் இலக்கு.அதற்கு ஏற்ற வகையிலேயே விடயங்கள் புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

















