-நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பிரேரணை-
மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாகப் பேணுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பிரேரணை முன்வைத்துள்ளார்.
மடு பிரதேச செயலர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான்- முள்ளிக்குளம் வீதியை மக்கள் பாவனைக்கு மேம்படுத்த பிரதேச செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அபிவிருத்திக்குழுவின் பரிந்துரை கோரப்பட்டது.
அப்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக 2015 ஆம் ஆண்டு மடு சரணாலயமாக இருந்த காடுகள் எந்தவித கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கி மடு தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்காவினுள் மக்களின் வாழ்விடங்கள், வீதிகள், வணக்க நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளது.
28-06-1968 ஆம் ஆண்டு ஐம்பது சதுர கிலோமீற்றருக்கும் குறைவான நிலப்பரப்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட சரணாலயம் எந்தக் கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
சரணாலயமாக இருந்தபோது அப்பிரதேசமூடாக மக்கள் பயணிக்கக்கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த சரணாலயத்தினூடாக பயணித்த பாதைகள், வயல்கள் என எந்தப் பயனையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைவரும் என எச்சரித்தார்.
எனவே 2015 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியை இரத்துச்செய்யுமாறும் தொடர்ந்தும் சரணாலயமாகவே இப்பிரதேசத்தை பேணுமாறும் முன்மொழிவை பிரேரித்து இப்பிரேரணையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அபிவிருத்தி குழுவின் தலைவரை கேட்டுக் கொண்டார்.இப்பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வழிமொழிய சபை அதை ஏற்றுக் கொண்டது.


















