மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது,
சம்பவ தினத்தன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்புக்கு செல்வதற்காக வவுணதீவு சந்தியில் என் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வயோதிபப் பெண்ணொருவரும் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். நான் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது, 100 ரூபாய் என்ற கட்டணத்தில் ஏறுமாறு கூறினர். நான் குழந்தையுடன் ஏறினேன். அங்கு இருந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார்.
முச்சக்கரவண்டி நகரை நோக்கி சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கினார். பின்னர், ‘நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, நான் புடவைக்கடை வீதியில் இறக்குமாறு கூறினேன். அங்கு சென்றபின், முச்சக்கரவண்டியில் இருந்த பெண் தானும் சாறி வாங்கச் செல்ல இருப்பதாகவும், தனது வேலை முடிந்ததும் மீண்டும் அதே வண்டியில் சேர்ந்து செல்லலாம் என்றும் கூறினார். மேலும், ‘சத்தர் கடையடியில் காத்திருப்பேன்’ என்றும் தெரிவித்தார்.
அதன்படி, நான் குழந்தையுடன் நகைக்கடைக்கு சென்று ஈடு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபாய் செலுத்தி மீட்டுக்கொண்டேன். பின்னர் அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றபோது, அவர் முச்சக்கரவண்டி சாரதியை தொலைபேசியில் அழைத்து, மணிக்கூட்டு கோபுரம் பகுதியில் வருமாறு கூறினார்.
நானும் அந்தப் பெண்ணும் அங்கு சென்று மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏறினோம். அதன் பின்னர் பொதுசந்தை வீதியில் சென்று வண்டியை நிறுத்திய சாரதி, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வவுணதீவு நோக்கி பயணித்தார்.
வலையிறவு பாலம் அருகே சென்றபோது, அந்தப் பெண் மூன்று ஜூஸ் பாட்டில்களை எடுத்தார். எனக்கும் என் குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, எனக்கு விளாம்பழ ஜூஸ் வழங்கினார். அதை நான் குடித்தேன். அதன் பின்னர் வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கினார்.
அதன்பின், தாள் கத்தியுடன் ஒரு இளைஞன் முச்சக்கரவண்டியில் ஏறினார். நான் இதைப் பற்றி கேட்டபோது, ‘மாட்டுக்கு புல் வெட்டச் செல்கிறார்’ என்று கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்குமாறு தெரிவித்தேன். ஆனால், முச்சக்கரவண்டி வேறு பாதையில் பாவற்கொடிச்சேனை நோக்கி சென்றது. நான் காரணம் கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாக கூறினர்.
சில நிமிடங்களில் நான் மயக்கம் அடைந்தேன். பின்னர் நான் நீரில் மூழ்கிய நிலையில் விழித்தேன். கிணற்றில் விழுந்திருந்த என்னை யாரோ கயிறு மூலம் மீட்டதாக பின்னர் அறிந்தேன்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.


















